விவேகானந்தரிடம் மனம் பறிகொடுத்த ரஷ்ய அறிஞர் டால்ஸ்டாய்!
புகழ் பெற்ற ரஷ்ய
அறிஞரான டால்ஸ்டாய் சுவாமி விவேகானந்தரை உலகச் சிந்தனையாளர்களுள் ஒருவராகக் கருதினார்
என்பது அவரது ஒரு கடிதத்திலிருந்து தெரிகிறது.
1. டால்ஸ்டாய், எப். ஒலிஹின்னிகோவ் என்பவருக்கு 8.4.1909 ல் எழுதிய ஒரு கடிதத்தில் .....பண்டைய சிந்தனையாளர்கள் மற்றும் இன்றைய சிந்தனையாளர்களைக் கொண்டு இந்த உண்மையை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இந்திய வேதங்களைப் படைத்தவர்கள் முதல் புத்தர், கன்பூசியல், லாவோட்ஸு, மார்க்கஸ் அரேலியஸ், ரூஸோ, எபிக்ரடஸ், சாக்ரடீஸ், பிளோட்டோ, இயேசு, பாஸ்கல், சண்ட், பசட், ÷ஷாபன் ஹோவர், எமர்சன், சுவாமி விவேகானந்தர் மற்றும் பலர்.... என்று குறிப்பிட்டார்.
2. டால்ஸ்டாய், இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்திற்குத் தார்மிக ஆதரவு தெரிவித்து, 14.12.1908-ல் ஓர் இந்துவுக்கு எழுதிய கடிதம் என்பதை எழுதினார். அதில் அவர் சுவாமிஜி பற்றி இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். இந்தியாவில் 200 மில்லியன் மக்கள் ஆன்மிகத்திலும் உடல் வலிமையிலும் சிறந்து விளங்குகிறார்கள். ஆனால் அவர்களை முற்றிலும் அந்நியமான ஒரு சிறிய கூட்டத்தினர் ஆட்சி செய்கிறார்கள். ஆளப்படுபவர்களைக் காட்டிலும், ஆள்பவர்கள் அளவிட முடியாத அளவில் தாழ்ந்தவர்கள். இதற்கு என்ன காரணம்? பகுத்தறிவுக்கு உட்படாத மதச் சித்தாந்தம் காரணமாக இருக்கலாம். இப்போது கருத்தை மிகவும் கவரும் இந்து எழுத்தாளரான சுவாமி விவேகானந்தரின் நூல்கள் இருக்கின்றன.
3. 13.9.1896-ல் அனேந்திரகுமார் தத்தா என்பவர் டால்ஸ்டாய்க்கு, சுவாமி விவேகானந்தரின் ராஜயோகம் என்ற நூலை அனுப்பினார். அதைப் பெற்றுக் கொண்ட டால்ஸ்டாய், தத்தாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் ....இது மிகவும் குறிப்பிடத்தக்க நூல். இதைப் படித்து நல்ல பயன் பெற்றேன். இதில் இறைவன் பற்றிய கருத்தும், மனிதனின் நான் என்பது பற்றிய உண்மைத் தத்துவமும் மிகவும் அருமையாக உள்ளன.
இதே நாளில் ப.வி. வெரிஜின் என்பவருக்கும், டால்ஸ்டாய் ஒரு கடிதம் எழுதினார். அதிலும் அவர், விவேகானந்தரின் நூல் தன்னைக் கவர்ந்தது பற்றிக் குறிப்பிட்டார். ரஷ்ய எழுத்தாளரான ஐ.எப்.நஜ்வின் சுவாமி விவேகானந்தரின் 1 எனது குருநாதர், 2. கடவுளும் மனிதனும், 3. படைப்பு பற்றிய துதிப் பாடல் போன்ற சில நூல்களை ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இந்த நூல்கள் 1908 இல் டால்ஸ்டாயின் கவனத்தை ஈர்த்தன.
4. விவேகானந்தரின் கடவுளும் மனிதனும் என்ற கட்டுரை டால்ஸ்டாயை மிகவும் ஈர்த்தது. 9.3. 1908 ல் டால்ஸ்டாய் நஜ்வினுக்கு எழுதிய கடிதத்தில், இந்த இந்து (சுவாமிஜி) எழுதிய கட்டுரை என் மனதில் பதிந்து விட்டது; இது மிகவும் நன்றாக உள்ளது; அபூர்வமானது என்றார்.
அடுத்தநாள் டால்ஸ்டாய் 10.3.1908 தேதியிட்ட தனது நாட்குறிப்பிலும் நஜ்வின் ரஷ்ய மொழியில் மொழி பெயர்த்த கடவுளும் மனிதனும் என்ற அந்த இந்துவின் அற்புதமான கட்டுரையை நேற்று படித்தேன். என் கருத்துகளுக்கு ஒத்த எண்ணங்கள் அதில் எளிமையாக வெளியிடப்பட்டுள்ளன என்று எழுதினார்.
5. டால்ஸ்டாயின் குடும்ப வைத்தியரும், நண்பருமான எஸ். ஆர் சிட்டாலே என்பவர், சுவாமி விவேகானந்தரின் இரண்டு நூல்களை டால்ஸ்டாய்க்கு அனுப்பினார். அது பற்றி டால்ஸ்டாய், 25.5.1908 இல் பின்வருமாறு கூறினார். கடவுள், ஆத்மா, மனிதன், சமய ஒற்றுமை ஆகியவை ஆச்சரியப்படும் வகையில், புலமையுடன் இந்த நூல்களில் பேசப்பட்டிருக்கின்றன. இவர் ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்.
6. டால்ஸ்டாய், 5.6.1908 இல் மகோவிட்ஸ்கியிடம் இப்படிக் கூறினார். இன்று காலை 5 மணியிலிருந்து விவேகானந்தரைப் பற்றியே நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன் நேற்றுப் பகல் முழுவதும் விவேகானந்தர் நூலைப் படித்தேன். இதில் தீமையை வன்முறையால் எதிர்ப்பதை நியாயப்படுத்தும் ஓர் அத்தியாயம் மிகவும் திறமையுடன் எழுதப்பட்டிருக்கிறது. இதில் அவர், சுவாமி விவேகானந்தர் ஆராய்ந்து பார்க்கும் திறமையைப் பாராட்டியிருக்கிறார்.
7. சுவாமி விவேகானந்தர் ஸ்ரீகிருஷ்ணர் பற்றி ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார். அதை டால்ஸ்டாய் 27.7.1908-ல் படித்தார். அது பற்றி அவர், வி.ஜி செர்ட்கோவ்விடம் பின்வருமாறு கூறினார். சில சமயங்களில் , தீமையை நன்மையால் வெல்ல வேண்டும் என்றும், மற்ற சமயங்களில் தீமை செய்பவனைக் கொல்ல வேண்டும் என்றும் கிருஷ்ணர் கூறுகிறார். பிறகு, கொலையுண்டவனை உயிர் பெறச் செய்து மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறார். இங்கு தண்டனையைக் குறைப்பது என்பது தீமை, செய்தவனுக்கும் நன்மையே செய்ய வேண்டும் என்ற நல்ல வழியை நாடுவதற்குச் சமம்.
8. டால்ஸ்டாய், இந்து மதத்தில் இடம் பெற்றிருக்கும் ஆத்ம விசாரணை என்பதில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். அதனால் அவர், சுவாமிஜியின் கருத்தைப் புரிந்து கொண்டதற்கு அடையாளமாக, தனது 26.6.1908 நாட்குறிப்பில் இவ்வாறு எழுதினார். சுவாமி விவேகானந்தர் கூறியபடி நான் என்பது நீ என்பதற்கு முழுவதும் வழிவிடுவதை உணர்கிறேன். சுயநலமின்மை என்பது வேறு எதற்காகவும் அல்ல; தெளிந்த அறிவைப் பெறுவதற்காகவே என்பதையும் உணர்கிறேன்.
9. டால்ஸ்டாய்க்கு 16.2.1909 இல் சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள், எழுத்துகள் அடங்கிய மூன்றாம் தொகுதி கிடைத்தது. இதுவே அவருக்குக் கிடைத்த விவேகானந்தரின் கடைசி நூல் என்று கருதப்படுகிறது. விவேகானந்தரின் நூல்களை, தான் மட்டும் படித்தால் போதாது-ரஷ்ய மக்களும் படித்துப் பயனடைய வேண்டும் என்று பெரிதும் விரும்பினார் டால்ஸ்டாய். இதனால் அவர் தமது, நூல்களை வெளியிடும் பதிப்பாளரிடம் 7.5.1909-இல் நீங்கள் இப்போது இந்தியாவின் மிகச் சிறந்த சிந்தனையாளரான விவேகானந்தரின் நூல்களை வெளியிட முன்வர வேண்டும் என்றார்.
10. டால்ஸ்டாய், அன்னி பெசன்ட் எழுதிய ஒரு நூலை 1910-இல் படித்தார், அது பற்றிய அவரது கருத்து இது: அன்னிபெசன்ட் பலவீனங்களையும் தவறுகளையும் சார்ந்து நிற்கிறார். ஆனால் விவேகானந்தரோ உண்மை எதுவோ அதைச் சார்ந்து நிற்கிறார்.
11. மதமும் விஞ்ஞானமும் என்ற தலைப்பில் டால்ஸ்டாய் ஒரு கட்டுரை எழுதினார். அதில் அவர் உலகில் தோன்றிய மற்ற மகான்களுடன், விவேகானந்தரின் பாரம்பரியத்தையும் மனிதகுலம் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். பிரெஞ்சு நாட்டு அறிஞர் ரொமா ரோலா, புகழ்பெற்ற இந்தி இசை மேதை திலீப்குமார் ராயிடம் பேசும்போது, திலீப் நான் சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். டால்ஸ்டாய் தனது இறுதிக் காலத்தில் விவேகானந்தரிடம் மனதைப் பறிகொடுத்திருந்தார் என்றார். டால்ஸ்டாய், சுவாமிஜியின் காட் அன்ட் சோல் என்ற கட்டுரையைப் படித்தார், அதைப் பற்றி அவர் 4.7.1908 தேதியிட்ட தமது நாட்குறிப்பில், இறைவனைப் பற்றி விவேகானந்தர் எழுதிய அற்புதமான கட்டுரையைப் படித்தேன். இதை ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்க வேண்டும். இதை நான் செய்ய நினைக்கிறேன் என்று எழுதினார்.
தமிழ்நாடு மதுரை
ReplyDeleteசுவாமி விவேகானந்தர் நினைவு நாள்
ReplyDelete4.7.2021 சுவாமி விவேகானந்தர் நினைவு நாள்
ReplyDelete